Tuesday, April 14, 2009

முகுந்த நாகராஜன் கவிதைகள் - ஒரு அறிமுகம்

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகுந்த நாகராஜனின் கவிதைகளை ஒரு இலக்கியக் சிற்றிதழில் வாசிக்க நேர்ந்தது.. அதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த இளைய கவிஞர் ஆகிப்போனார் முகுந்த். முகுந்தின் கவிதைகள் மற்ற பின்நவீனத்துவ கவிதைகள் போல் மூன்று மாதம் கழித்து புரியாமல், அப்போதே புரிந்திடும் தன்மை வாய்ந்தது என்னை மிகவும் கவர்ந்த அம்சம். படிமம், குறியீடு போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் படித்து சுவைக்க ஏற்றவை. 
முகுந்தின் கவிதைகள் நமக்கு அதிக மன எழுச்சியை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் அவை நம் மனதிலும் முகத்திலும் ஒரு மென்னகையை ஏற்படுத்தும். முக்கியமாக அவரது குழந்தைகளைப் பற்றிய கவிதைகள்..  
அவரது குழந்தைக் கவிதைகள் நம்மை நாம் இழந்த அறியாமைக்காக ஏங்க வைப்பவை. நாம் தினமும் கடந்து வரும் அற்புதமான குழந்தைகளின் உலகத்தில் நாம் கவனிக்கத் தவறிய மிகக் சாதரணமான கணங்களே அவரது கவிதைக்கான களம். அக்கணங்களை அலங்காரம் இல்லாமல் எளிய வார்த்தைகளால் நம்முன் காட்சியாக விரிக்கும் அவரது கவிதைகள். எளிய கவிதைப் போல் தோற்றமளித்தாலும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளக் கவிதைகள். எதையும் கவிதையாகப் பார்க்கும் மனம் கொண்டவர்.  
மொத்தத்தில், அவரது கவிதைகள் நமது குழந்தைமையை மீட்பதற்கான ஒரு கருவி. அவரது கவிதைகளில் சில..

முகம் திருத்துதல்

மேல் பெர்த்தில் இருந்து
இறக்கி விட்டதற்காக
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு
முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்
ஐந்து நிமிஷத்தில் அப்படியே
தூங்கியும் விட்டாள்.
கோபமாகத் தூங்குகிற மகளை
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த
அவள் அம்மா அப்புறம்
போர்வையை ஒழுங்கு செய்வது போல்
மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை
விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு 
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.
 
முத்த அறுவடை
கல்யாண வீட்டில் அவள்
நடந்து சென்ற பாதை எங்கும்
முத்தம் பூத்தது.
தன் சிகப்பு நிற குட்டிப் பாவாடையில்
பிஞ்சு வெண்டைக்காய்களைப் போல்
முத்தங்களை அள்ளிச் சென்று
அம்மாவிடம் கொட்டினாள்.
வேலையாய் இருந்த அவள் அம்மா
'கல்யாண சமையலுக்கு இது போதாது'
என்று சொல்லி மறுபடியும்
விரட்டி விட்டாள் அவளை.
மழை ஆரம்பித்தவுடன்
மடித்து வைக்க நேரமில்லாமல்
அப்படியே அள்ளிக் கொண்டு வரும்
மொட்டை மாடி துணிகளைப் போல
பாதி முத்தங்களோடும்
கால் முத்தங்களோடும்
தன் பயணத்தைத் தொடர்ந்து
மெல்லிசைக் குழுவினர் மேடையில் ஏறினாள்.
தன் வரிகளைப் பாடி முடித்து விட்டு
சும்மா நின்று கொண்டிருந்த பாடகி
அவளை தூக்கிக் கொண்டாள்.
வீடியோகாரன் வெளிச்சத்தை
மேடை மேல் திருப்பினான்.
அவள் அம்மா கைவேலையை விட்டு விட்டு
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள்.


நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்-களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

நான்தான் மின்விளக்கு

"நான்தான் மின் விளக்கு" என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
என்னை 1869-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டு பிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.
"அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?" என்றாள்
நிகழ்சி நடதியவள்.
பதில் எதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்கு பிரகாசமாக.

வட்டம் வட்டமாய்
அதிகாலை வந்திறங்கி
பனிக் குல்லாயைக் கழற்றி விட்டு
திறந்த வாய் மூடாமல்
சென்ட்ரல் ஸ்டேஷனைப்
பார்த்தது கைக்குழந்தை
வாழ்க்கையில் முதல் முறையாய்.
உயரமான கூரையை அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருந்த போது
'நல்லா இருக்கா..
இதான் சென்ட்ரல் ஸ்டேஷன்' என்று
அம்மாவின் குரல் காதருகே
மெதுவாய்க் கேட்டது.
திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தது.
அப்படியே நான்காவது நடைமேடையில் இருந்த
எடை பார்க்கும் கருவியில்
வட்ட வட்டமாய் சுழன்று ஒளிர்ந்து கொண்டிருந்த
ஆரஞ்சு விளக்கினை
குறித்து வைத்துக் கொண்டது.

பூ பறித்தல்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில் 
தேடுகிறாள் அம்மா.
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது


இப்படி அப்படி

"இப்படி இப்படி டான்ஸ் ஆடுகிறேன்"
என்றாள் தொலைபேசியில் சிறுமி.
இப்படி இப்படி என 
ஒரு காட்சி தோன்றியது.
அப்படி அப்படித்தானா என்று
பார்த்து விடுகிறேன் 
ஊருக்குப் போகும்போது


பிரிவைக் குறித்து

கதவு 
பிரிவைக் குறிக்கிறது 
குழந்தைக்கு. 
கதவு அருகே போனாலே 
அழ ஆரம்பித்து விடுகிறது. 
அதனால் தினமும் 
சுவர் வழியாக வெளியேறி 
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.

நாய் பொம்மை

1


வரிசையாக 
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற 
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.

2

தன் பெயரின் முதல் எழுத்தை
கழுத்தில் மாட்டிய பொம்மையை 
எடுத்து வைத்துக் கொண்டு
தன் காதலன் பெயருக்கான பொம்மையை 
ஆவலுடன் தேடுகிறாள் காதலி.

3

பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு
முகுந்தின் கவிதைகள் நமக்கு தரும் மனநிறைவு விவரிக்கமுடியாதது.. அவரின் மற்ற கவிதைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும். http://veenaapponavan.blogspot.com/


12 comments:

  1. //எதையும் கவிதையாகப் பார்க்கும் மனம் கொண்டவர்.
    மிக சரியான வார்த்தை...

    //'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
    என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
    அற்புதம்..

    நல்ல அறிமுகம். நன்றி...

    ReplyDelete
  2. உண்மைலேயே நம் கண் முன்னால் விலகி போகும் (அழகான) தருணங்கள்

    உக்காந்து யோசிபான்களோ

    ReplyDelete
  3. @ நந்தா
    'அகி', 'ஒரு இரவில் 21 செ.மீ மழை பெய்தது' - இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளது...
    அகி எனக்கு சென்ற வருடம் ஜெகன் தயவால் படிக்கக் கிடைத்தது.. ஒரு இரவில்.. இந்த தடவை நாம் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது உனக்கு நினைவிருக்கலாம்.

    @ ஜெகா
    அகி கிடைத்தால் படிக்கவும், மேலும் சிறந்த கவிதைகள் அதில் இருந்தது...
    ஒரு இரவில்... உள்ள கவிதைகள் பெரும்பாலும் அவரது வலைப்பூவில் உள்ளன.


    நம்மளும்தான் இதெயெல்லாம் பாக்கறோம், நமக்கும் ஒன்னும் தோன மாடீங்குதே.. :-)

    ReplyDelete
  4. இந்த மாதிரி சம்பாவங்கள பாக்குற இயல்பா இழந்துட்டு வரேனோனு பயமா இருக்கு.

    ReplyDelete
  5. நண்பா சு.கு,
    நமது வசந்தனை 'வளர்ந்து கெட்டவன்' என்று அவன் உயரம் காரணமாக அழைப்பது உண்டு..
    உண்மையில் 'வளர்ந்து கெட்டவர்கள்' நாம்தான்.. வளர்ந்ததால் கெட்டவர்கள்...

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை.

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  7. நன்றி வண்ணத்துபூச்சியார் மற்றும் ஷெரீப்!

    ReplyDelete
  8. hi very nice poems..Pl keep sharing such beautiful poems.. if time permits pl check out my blog to find my amateurish poetic side..

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு சிவராம்.நன்றி.

    ReplyDelete