Thursday, April 16, 2009

Soul Stirrers

I have wondered many a time how, of all genres of music, 'ghazals' are close to my heart. A little introspection led to the discovery that my interest in music and literature converges, to the same point at which ghazals blossom.

'Ghazal' literally means 'talking to your beloved'. Beloved may range from God to a dog. But, most of the ghazals, talk about the beauty of love and pain of separation. Ghazal, predominantly a poetry form, was made popular by ghazal singers who brought soul into it through great compositions. Unlike 'dhurupad', a hindustani classical genre for which understanding of 'raaga' is a prerequisite to enjoy, ghazals in Urdu impress even an average music listener. Ghazals, nowadays with hindi lyrics reach to wider listeners.

Of all ghazal singers, i revere the most are Ustad Mehdi Hassan and Ustad Ghulam Ali. Even though both of them are from different 'gharanas', the similarities in their composing style and voice in lower and mid octaves, are striking. The two Ustads are a cut above the rest in terms of,

1) Choice of Poetry

2) Composition

3) Improvisations during each rendering

Initially, i was introduced to ghazals through cine-ghazals. The song from ‘sarfarosh’, ‘Hoshwaalon ko khabar kya’ rendered by Jagjit Singh, if i remember correctly, was the first ghazal i listened to. Then, i had not known what exactly a traditional ghazal is and i was going gaga about this number. I collected a lot of Jagjit, Hariharan and Pankaj Udhas ghazals and listened to them.

After i moved to delhi in 2005, one day i was talking to my senior manager about ghazals and raving about Jagjit’s songs. He, an avid listener of ghazals, told me to throw away the mediocre ghazals of Jagjit and listen to Ghulam Ali. I was shocked. I bought a Ghulam Ali’s CD the same month and fell in love completely with the songs. Boss is always right!

I came to know about Mehdi Hassan, of late in 2007. Then i started downloading Mehdi Hassan’s songs and lost myself completely into it.

I would recommend these numbers for your joyous listening.

Mehdi Hassan

1) Abke Hum Bichde – Excellent lyrics, great composition and rendering.

2) Aaye kuch abr kuch – Difficult to understand urdu lyrics, but a listener’s delight.

3) Baat karni kabhi mushkil – great lyrics and composition

4) Zindagi mein to sabhi – lyrics not so special but a very good composition (mehdi rocks in charanam)

5) Tujhko aate hi nahin – Post-modern like lyrics combined with good composition.

6) Rafta Rata who meri – Lovable fun filled wordplay. Delightful song.

Ghulam Ali

1) Itni Muddat baat mile ho – Great lyrics, nice composition and excellent improvisations.

2) Humko Kiske gham ne maara – Great lyrics and great composition.

3) Chamakte Chaand ko – Excellent Philosophical lyrics and a great song all-round

4) Roya Karenge aap bhi – you can notice the lyrics addressed directly to the listener, which is a rarity in any form of poetry.

“Roya Karenge aap bhi paheron isi tarah,

atkaa kahin bhi aapka dil bhi meri tarah” which roughly translates into something like this:

“ You will be crying like I do,

If your heart get stuck somewhere, like mine had” (somesort of curse or what?)

5) Chupke Chupke raat din – another ghazal on separation with nostalgic references of good times. A must listen.

A long list of ghazals of the great Ustads still pending, for me to listen. Hope to complete them this summer and start listening to Begum Akhtar soon…

Tuesday, April 14, 2009

முகுந்த நாகராஜன் கவிதைகள் - ஒரு அறிமுகம்

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு முகுந்த நாகராஜனின் கவிதைகளை ஒரு இலக்கியக் சிற்றிதழில் வாசிக்க நேர்ந்தது.. அதிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த இளைய கவிஞர் ஆகிப்போனார் முகுந்த். முகுந்தின் கவிதைகள் மற்ற பின்நவீனத்துவ கவிதைகள் போல் மூன்று மாதம் கழித்து புரியாமல், அப்போதே புரிந்திடும் தன்மை வாய்ந்தது என்னை மிகவும் கவர்ந்த அம்சம். படிமம், குறியீடு போன்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் படித்து சுவைக்க ஏற்றவை. 
முகுந்தின் கவிதைகள் நமக்கு அதிக மன எழுச்சியை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் அவை நம் மனதிலும் முகத்திலும் ஒரு மென்னகையை ஏற்படுத்தும். முக்கியமாக அவரது குழந்தைகளைப் பற்றிய கவிதைகள்..  
அவரது குழந்தைக் கவிதைகள் நம்மை நாம் இழந்த அறியாமைக்காக ஏங்க வைப்பவை. நாம் தினமும் கடந்து வரும் அற்புதமான குழந்தைகளின் உலகத்தில் நாம் கவனிக்கத் தவறிய மிகக் சாதரணமான கணங்களே அவரது கவிதைக்கான களம். அக்கணங்களை அலங்காரம் இல்லாமல் எளிய வார்த்தைகளால் நம்முன் காட்சியாக விரிக்கும் அவரது கவிதைகள். எளிய கவிதைப் போல் தோற்றமளித்தாலும் ஆழ்ந்த அர்த்தம் உள்ளக் கவிதைகள். எதையும் கவிதையாகப் பார்க்கும் மனம் கொண்டவர்.  
மொத்தத்தில், அவரது கவிதைகள் நமது குழந்தைமையை மீட்பதற்கான ஒரு கருவி. அவரது கவிதைகளில் சில..

முகம் திருத்துதல்

மேல் பெர்த்தில் இருந்து
இறக்கி விட்டதற்காக
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு
முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்
ஐந்து நிமிஷத்தில் அப்படியே
தூங்கியும் விட்டாள்.
கோபமாகத் தூங்குகிற மகளை
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த
அவள் அம்மா அப்புறம்
போர்வையை ஒழுங்கு செய்வது போல்
மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை
விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு 
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.
 
முத்த அறுவடை
கல்யாண வீட்டில் அவள்
நடந்து சென்ற பாதை எங்கும்
முத்தம் பூத்தது.
தன் சிகப்பு நிற குட்டிப் பாவாடையில்
பிஞ்சு வெண்டைக்காய்களைப் போல்
முத்தங்களை அள்ளிச் சென்று
அம்மாவிடம் கொட்டினாள்.
வேலையாய் இருந்த அவள் அம்மா
'கல்யாண சமையலுக்கு இது போதாது'
என்று சொல்லி மறுபடியும்
விரட்டி விட்டாள் அவளை.
மழை ஆரம்பித்தவுடன்
மடித்து வைக்க நேரமில்லாமல்
அப்படியே அள்ளிக் கொண்டு வரும்
மொட்டை மாடி துணிகளைப் போல
பாதி முத்தங்களோடும்
கால் முத்தங்களோடும்
தன் பயணத்தைத் தொடர்ந்து
மெல்லிசைக் குழுவினர் மேடையில் ஏறினாள்.
தன் வரிகளைப் பாடி முடித்து விட்டு
சும்மா நின்று கொண்டிருந்த பாடகி
அவளை தூக்கிக் கொண்டாள்.
வீடியோகாரன் வெளிச்சத்தை
மேடை மேல் திருப்பினான்.
அவள் அம்மா கைவேலையை விட்டு விட்டு
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தாள்.


நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவு விடுதியில்
சாப்பிட்டு விட்டு
கை கழுவப் போனேன்.
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ்பேசின்-களும்
மிகக் குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன.
கை கழுவும் போது
காரணம் தெரிந்து விட்டது.
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடி விட்டு
விரைவாக வெளியே வந்து விட்டேன்.

நான்தான் மின்விளக்கு

"நான்தான் மின் விளக்கு" என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
என்னை 1869-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டு பிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.
"அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?" என்றாள்
நிகழ்சி நடதியவள்.
பதில் எதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்கு பிரகாசமாக.

வட்டம் வட்டமாய்
அதிகாலை வந்திறங்கி
பனிக் குல்லாயைக் கழற்றி விட்டு
திறந்த வாய் மூடாமல்
சென்ட்ரல் ஸ்டேஷனைப்
பார்த்தது கைக்குழந்தை
வாழ்க்கையில் முதல் முறையாய்.
உயரமான கூரையை அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருந்த போது
'நல்லா இருக்கா..
இதான் சென்ட்ரல் ஸ்டேஷன்' என்று
அம்மாவின் குரல் காதருகே
மெதுவாய்க் கேட்டது.
திரும்பி அம்மாவைப் பார்த்து சிரித்தது.
அப்படியே நான்காவது நடைமேடையில் இருந்த
எடை பார்க்கும் கருவியில்
வட்ட வட்டமாய் சுழன்று ஒளிர்ந்து கொண்டிருந்த
ஆரஞ்சு விளக்கினை
குறித்து வைத்துக் கொண்டது.

பூ பறித்தல்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில் 
தேடுகிறாள் அம்மா.
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது


இப்படி அப்படி

"இப்படி இப்படி டான்ஸ் ஆடுகிறேன்"
என்றாள் தொலைபேசியில் சிறுமி.
இப்படி இப்படி என 
ஒரு காட்சி தோன்றியது.
அப்படி அப்படித்தானா என்று
பார்த்து விடுகிறேன் 
ஊருக்குப் போகும்போது


பிரிவைக் குறித்து

கதவு 
பிரிவைக் குறிக்கிறது 
குழந்தைக்கு. 
கதவு அருகே போனாலே 
அழ ஆரம்பித்து விடுகிறது. 
அதனால் தினமும் 
சுவர் வழியாக வெளியேறி 
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.

நாய் பொம்மை

1


வரிசையாக 
அடுக்கி வைக்கப்பட்டிருந்த
நாய் பொம்மைகளில்
குழந்தை விளையாடி விட்டு
வைத்துச் சென்ற 
பொம்மையின் முகத்தில் மட்டும்
கூடுதல் சிரிப்பு.

2

தன் பெயரின் முதல் எழுத்தை
கழுத்தில் மாட்டிய பொம்மையை 
எடுத்து வைத்துக் கொண்டு
தன் காதலன் பெயருக்கான பொம்மையை 
ஆவலுடன் தேடுகிறாள் காதலி.

3

பொம்மை வாங்க இயலாத ஒருவன்
தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு
நாய்க் கதையை உருவாக்கிக் கொண்டு
நகர்கிறான் கடையை விட்டு
முகுந்தின் கவிதைகள் நமக்கு தரும் மனநிறைவு விவரிக்கமுடியாதது.. அவரின் மற்ற கவிதைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும். http://veenaapponavan.blogspot.com/


Thursday, April 9, 2009

49(ஓ) போடு

தேர்தல் சமயமாகயால்.. ஒரு தேர்தல் இடுகை..
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 2006-ல், எங்களது தொகுதியில் திறமையான(?) போட்டியாளர்கள் இல்லாததாலும், 49(ஓ) பற்றிய ஞானம் பெற்றதாலும் அதை செயல்படுத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
தேர்தல் அன்று காலை கடமை பொங்கும் குடிமகனாய், 8.00 மணிக்கே ஓட்டுப் பதிவு செய்ய சென்றுவிட்டேன். என் முறை வந்ததும், தேர்தல் மைய அதிகாரியிடம் சென்று எனது ஓட்டை 49(ஓ)-வில் பதிவு செய்ய விரும்பியதாகக் கூறினேன். என்னை அவர் மேல்கீழ்ப் பார்த்து " ஏன், நீங்க இந்த தொகுதி இல்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டார். 'என்னே ஜனநாயகத்துக்கு வந்த கொடுமை' என்று நினைத்த நான், அவருக்கு 49(ஓ) பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் நீண்ட உரையாற்றினேன்..
சித்தம் தெளியப்பெற்றவராய் அவர் என்னைப் பார்த்து, "அதுக்கான formalities எனக்குத் தெரியலை, zonal officer rounds வர்ற நேரம் அவர்ட்ட கேட்டு வைக்கிறேன், நீங்க கொஞ்சம் கோவிச்சுக்காம ஒரு மணிநேரம் கழிச்சு வர முடியுமா?" என்று கேட்டார்.
அமோதிப்பவனாய் வீட்டுக்கு வந்துவிட்டு அரசாங்க அதிகாரிகளின் மெத்தனத்தை மனதில் வைத்து இரண்டு மணிநேரம் கழித்து சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் "வாங்க வாங்க" என்று முகமலர்ச்சியுடன் திருமண வீடு போல அதிகாரி அழைத்து, " சார் வந்துட்டாரு" என்று அருகிலிருப்பவரைப் பார்த்து கூக்குரலிட்டார். நான் திடுக்கிட்டு சுற்றுமுற்று பார்த்துக்கொண்டு சென்றேன். பின்பு, ஒரு ரெஜிஸ்தரில் என் கையெழுத்தையும், என் ரேகைப் பதிவையும் வாங்கிக்கொண்டார்.. இதற்கிடையில், இதைஎல்லாம்ப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கரை வேட்டிப் பெருசு "என்ன தம்பி, என்னாப் பிரச்சனை?" என்று பாய்ந்து வந்தது. அதிகாரியும் மற்ற ஆட்களும் எனக்கு முன் வந்து "ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை" என்று பெருசை சமாதானம் செய்தனர். நான் அதிகாரியின் அறியாமையைத் தாண்டி அவருடைய அணுகுமுறையை வியந்து ஜனநாயகத்தை காத்த பெருமையோடு வெளியே வந்தேன்.

Wednesday, April 8, 2009

சமீபத்தில் ரசித்த பழைய பாடல்கள்

1) ஜனவரியில் நண்பனுடன் ' வாரணம் ஆயிரம் ' திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது திரையில் பெயர்ப்போடும் போது ஒலித்த பல பாடல்களில் ஒன்று 'கோடைக்காலக் காற்றே' என்ற பாடல். பல வருடங்களுக்குப் பின் அந்த பாடலை கேட்டதற்கு கௌதம் மேனன்-உக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பாட்டைக் கேட்காமல் வாழ்நாளில் பல வருடங்களை வீணடித்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. வேலைப் பளு காரணமாக மறந்தும் போனேன். சில நாட்களுக்கு பிறகு நினைவு வர, Cool Toad சாமியின் கருணையினால் அதை தரவிறக்கிக் கேட்டேன். இந்தப்பாடல் ராஜாவின் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்தில் வருகிறது..
பொதுவாக Chord Progression-ல் வரும் மாற்றங்கள்(scale changes) இந்த பாடலின் மெட்டிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னணி இசையே இல்லாமலும் இந்த பாடலின் மெட்டு சுகம் தரவல்லது. vintage ராஜா. இன்னொரு அம்சம் கம்பீரமாய் ஒலிக்கும் மலேசியா வாசுதேவன் குரலை, பள்ளிப் பருவக் கதையாகயால் மென்மையாகப் பயன்படுத்தி இருப்பது...

2) சிறு வயது முதலே 'செம்மீன்' படத்தில் வரும் 'மானச மைனே வரு' என்ற பாடலைத் தெரிந்திருந்தேன். தெரிந்திருந்தேனேத் தவிர அறிந்திருக்கவில்லை. சில மாதங்கள் முன் ஒரு மலையாளத் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலை ஒருவர் நான்கு வரி பாடினார். உடனே இந்த பாடலின் மீது ஒரு ஈர்ப்பு. தரவிறக்கினேன். சலில் சௌத்ரி-இன் இசையில் வந்தப் பாடல்.. 1965-ல் மன்னா டே பாடியது..
இசை விமர்சகர் ஷாஜி அவரது புத்தகத்ததில் சலில் சௌத்ரி-யை ராஜா-வின் முன்னோடி என்று குறிப்பிட்டிருந்தது, எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. இசை அமைக்கப்பட்டக் காலத்தை மனதில் வைத்து பாடலைக் கேட்டால் சலில்-தா உண்மையிலேயே முன்னோடிதான். மெட்டாகட்டும், இசைக் கோர்ப்பாகட்டும், சலில் அந்த காலத்திலேயே வெகு இயல்பாய் இந்த பரிட்சார்த்தங்களை செய்து பார்த்திருக்கிறார். வங்காளியான சலில்-தா பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்!!
இன்னொரு விசேஷம் இந்த பாடலை பாடிய வங்காளியான மன்னா டே- யின் மலையாள உச்சரிப்பு.. என்னை விட மோசமாய் மலையாளத்தை உச்சரிக்கும் ஒருவர் மன்னா டே என்று நினைக்கிறேன்...

3) சமீபத்தில் 'சிவா மனசுல சக்தி' என்று ஒரு மொக்கைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் 'கோபுர வாசலிலே' படத்தில் வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்ற பாடலின் சரணம் ஒலித்தது(அந்த படத்தில் இருந்து பெற்றுக் கொண்ட ஒரே உருப்படியான விஷயம்). கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப் பாடலை கேட்கவில்லை என்று பட்டவுடன் தரவிறக்கினேன்..(இணையம் இல்லையேல் இறந்தே போவேன்). துள்ளலானப் பாடல். violin/flute prelude என்று அட்டகாசமான ஆரம்பம். 1st interlude-ல் இளம் காதலைப் பிழிந்துள்ள ராஜா, 2nd interlude-ல் பயமுறுத்துகிறார்.

கடைசியாக, ரஹ்மான் 'ஆஸ்கார்' விருது வென்ற பிறகு, இணையத்தில் ராஜா-வா ரஹ்மானா என்று பல இசை வெறியர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டதை கவனித்தேன்...
மேல்சொன்னவைப் போன்ற நூற்றுக்கணக்கான பாடல்களை நான் மறந்ததர்க்கு ரஹ்மானின் இசை ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்..

இதுவே நான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டும், பாராட்டும்..

விஜய் பட டி.வி.டி தந்தாரா விஜய் மல்லையா?

இந்த வருடம் formula 1 களைக் கட்டும் போல் தெரிகிறது... முதல் இரண்டு Race-கள் முடிந்த நிலையில், 'முன்னாள் சாம்பியன், இந்நாள் சாம்பியன், இருமுறை சாம்பியன்' என்று சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று நான்கு நபர்கள் podium அருகில் நிற்க கூட அனுமதிக்கப் படவில்லை. இந்த வருடம் களமிறங்கிய Brawn GP (அதாங்க நம்ம Honda) கலக்கி வருகிறது. Mercedes என்ஜின் பொருத்தப்பட்டக் கார்கள் முன்னணி வகிக்கின்றன..
நமது விஜய் மல்லையா-வின் Force India-வும் Mercedes பொருத்தப்பட்டது. சரி, சென்ற வருடம் போல் இல்லாமல் இம்முறை சிறிது முன்னேற்றம் இருக்கும் என்று நினைத்தவர்களை அதிர்ச்சி அடைய செய்த வண்ணமாய் Australian GP-யில் புள்ளிகளை வெல்வதற்கு வெகு அருகில் வந்தது..
அடுத்து Malaysian GP-யில் பழையக் குருடி கதவத் திறடி என்று தத்தம் வழக்கமான position-களுக்கு சென்றது..
இதற்கிடையில் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியில், விஜய் மல்லையா Force India-வின் Fisichella மற்றும் sutil-ஐ அழைத்து விஜய் நடித்த "குருவி" படத்தை திரையிட்டுக் காட்டியதாகத் தகவல். அதில் ஓட்டைக் காரை வைத்துக் கொண்டு Race வெல்வது எப்படி என்பதற்கான செயல் முறை விளக்கம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது..
படம் பார்த்த இருவரும் பரவச நிலை அடைந்ததாகவும் அடுத்த Race-ல் வெல்வோம் என்று 'த்ரிஷா' மீது சத்தியம் செய்ததாகத் தகவல்..
இது குறித்து அணுகியபோது.. விஜய்-இன் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் அவர்கள் இந்த சம்பவத்தை திட்டவட்டமாக மறுத்ததோடு அல்லாமல், 'குருவி போன்ற உன்னதமான உலகத் திரைப்படத்தை Ferrari, Mclaren போன்ற உயர்ந்த அணிக்கு மட்டுமே திரையிடுவோம்' என்று உறுதிப்படக் கூறினார்.
எனவேதான் தலைப்பு..

விஜய் பட டி.வி.டி தந்தாரா விஜய் மல்லையா?

Tuesday, April 7, 2009

தற்போது படித்துக்கொண்டிருப்பது...

ஜெயமோகனின் "பின்தொடரும் நிழலின் குரல்" கஷ்டப்பட்டுப் படித்துக் கொண்டிருக்கிறேன். கம்யூனிசம் சார்ந்த கதை.கதையிலும் நடைமுறையிலும் கம்யூனிஸ்ட்டுகள் மிகுந்த சோர்வைத் தருகிறார்கள்.
புரிந்து கொள்ள எளிய கோட்பாடுதான் கம்யூனிசம் என்றாலும், அதன் கிளைப் பிரிவுகள், ஆரம்பக் கால தலைவர்கள், புரட்சியாளர்கள் ஆகியோரைப் பற்றிய அரைகுறைப் புரிதல்களும், கம்யூனிசத்திலிருந்து மீண்டவர்களின் எழுத்துக்களும், தற்போதையத் தலைவர்களும், கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சியும், எழுச்சியும், தொழில் சங்கங்களின் நடவடிக்கைகளும் மிகுந்த குழப்பத்தை விளைவிக்கின்றன.
யாராவது உட்கார வைத்து 'ட்யூஷன்' சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது...
ஒரு நாவலைத் தப்பாகப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு வருகிறது.. இருந்தாலும் தொடர்கிறேன்...

கடல்

சென்ற கடல் பயணத்தில்
கொண்டு செல்ல மறந்தவை..  
சீப்பு,  
நகவெட்டி,  
சில கவலைகள்,  
இதயம் கவர் இசை,  
ஒரு நல்ல பேச்சுத் துணை,  
மற்றும்..  
என்னை எழுதிய ஒரு புத்தகம்!

நானும் இசையும் எழுத்தும்

இசைக்கு என்றுமே என் வாழ்வில் தனி இடம் உண்டு...
பதின் பருவம் முதலே 'என்னுடைய பாட்டு கேட்டு ஒரு சிறு கூட்டம் பரவசப்படும் சித்திரம்' என் பகற்கனவுகளை ஆக்கிரமித்திருக்கும். இது பெண்களை பற்றிய பகற்கனவுகளை விட அதிக மனக் கிளர்ச்சியை தருவதாக நான் உணர்ந்ததுண்டு. ஆனால் இசை கற்றுக்கொள்ள எந்த முயற்சியும் நான் எடுக்காத நிலையில் என் பகற்கனவின் சாத்தியங்கள் வெகுவாக குறைந்துள்ளதை இப்போது உணர முடிகிறது... 
கல்லூரிப் பருவத்தில் என் நண்பர்கள் மூலமாக இலக்கியத்தின் மீது தடுக்கி விழுந்தேன். எழுத்து என்னை வசீகரித்தது...  
கலைக்கே உள்ள குறும்புத்தனம் ரசிகனை மயக்கி படைக்கத் தூண்டி அவனை முட்டாளாக்கி முச்சந்தியில் நிறுத்துவது. அதுதான் என்னையும் இப்போது முச்சந்தியில் நிறுத்தியுள்ளது.
எழுத ஆரம்பித்த சில கணங்களிலேயே என்னுடைய பலவீனம் எனக்கு வெட்ட வெளிச்சமாகியது. எழுத்து புலன் நுகர்வு சம்பந்தப்பட்டது. செவி நுகர்வே அதிகம் உள்ள என்னால் சொல்லில் சித்திரங்கள் வரைய முடியாது. எனது வர்ணனை படிப்பவர்கள் மனதில் சித்திரத்தை எழுப்பாது....அப்புறம் ஏன் இந்த வீண் வேலை? என் எழுத்தின் மூலம் உங்கள் இதயத்தின் இசை நரம்புகளை மீட்ட முடியும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூ அதற்கான முயற்சி...
என்ன செய்வது? சில சமயம் என்னைப் பற்றிய மிகையான எண்ணங்கள் எனக்கு உண்டு..