தேர்தல் சமயமாகயால்.. ஒரு தேர்தல் இடுகை..
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 2006-ல், எங்களது தொகுதியில் திறமையான(?) போட்டியாளர்கள் இல்லாததாலும், 49(ஓ) பற்றிய ஞானம் பெற்றதாலும் அதை செயல்படுத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
தேர்தல் அன்று காலை கடமை பொங்கும் குடிமகனாய், 8.00 மணிக்கே ஓட்டுப் பதிவு செய்ய சென்றுவிட்டேன். என் முறை வந்ததும், தேர்தல் மைய அதிகாரியிடம் சென்று எனது ஓட்டை 49(ஓ)-வில் பதிவு செய்ய விரும்பியதாகக் கூறினேன். என்னை அவர் மேல்கீழ்ப் பார்த்து " ஏன், நீங்க இந்த தொகுதி இல்லையா?" என்று பரிதாபமாகக் கேட்டார். 'என்னே ஜனநாயகத்துக்கு வந்த கொடுமை' என்று நினைத்த நான், அவருக்கு 49(ஓ) பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் நீண்ட உரையாற்றினேன்..
சித்தம் தெளியப்பெற்றவராய் அவர் என்னைப் பார்த்து, "அதுக்கான formalities எனக்குத் தெரியலை, zonal officer rounds வர்ற நேரம் அவர்ட்ட கேட்டு வைக்கிறேன், நீங்க கொஞ்சம் கோவிச்சுக்காம ஒரு மணிநேரம் கழிச்சு வர முடியுமா?" என்று கேட்டார்.
அமோதிப்பவனாய் வீட்டுக்கு வந்துவிட்டு அரசாங்க அதிகாரிகளின் மெத்தனத்தை மனதில் வைத்து இரண்டு மணிநேரம் கழித்து சென்றேன். உள்ளே நுழைந்தவுடன் "வாங்க வாங்க" என்று முகமலர்ச்சியுடன் திருமண வீடு போல அதிகாரி அழைத்து, " சார் வந்துட்டாரு" என்று அருகிலிருப்பவரைப் பார்த்து கூக்குரலிட்டார். நான் திடுக்கிட்டு சுற்றுமுற்று பார்த்துக்கொண்டு சென்றேன். பின்பு, ஒரு ரெஜிஸ்தரில் என் கையெழுத்தையும், என் ரேகைப் பதிவையும் வாங்கிக்கொண்டார்.. இதற்கிடையில், இதைஎல்லாம்ப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கரை வேட்டிப் பெருசு "என்ன தம்பி, என்னாப் பிரச்சனை?" என்று பாய்ந்து வந்தது. அதிகாரியும் மற்ற ஆட்களும் எனக்கு முன் வந்து "ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை" என்று பெருசை சமாதானம் செய்தனர். நான் அதிகாரியின் அறியாமையைத் தாண்டி அவருடைய அணுகுமுறையை வியந்து ஜனநாயகத்தை காத்த பெருமையோடு வெளியே வந்தேன்.
Thursday, April 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
:-)))))))))))))))
ReplyDelete